
தெரு நாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் மாற்றம்; புதிய விதிமுறைகள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
தெரு நாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, பிடிக்கப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடங்களில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தின் அனைத்து ஒத்த வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு இறுதி தேசியக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து அடைக்குமாறு ஆகஸ்ட் 11 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வெறிநாய்க்கடி
வெறிநாய்க்கடி சம்பவங்கள்
நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும், 54 வெறிநாய்க்கடி மரணங்களும் பதிவாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த உத்தரவு விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. நாய்களைப் பிடித்து வைப்பதற்கான உள்கட்டமைப்பு இல்லாதது மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை ஆகியவை முக்கிய வாதங்களாக முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக, நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய முன்வந்தது.
உத்தரவு
புதிய உத்தரவின் விபரங்கள்
உச்ச நீதிமன்றம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க அனுமதி இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த வார்டுகளில் நாய்களுக்கு உணவளிப்பதற்கான பிரத்யேக இடங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கூடுதலாக தெரு நாய்களை கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விட்டுவிட அனுமதி வழங்கப்படுகிறது.