அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 21) ஒத்திவைத்தது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி எஸ்.மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்க இயக்குனரகம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை இன்று விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், அமலாக்க இயக்குனரகத்தின் மனுவை ஒத்திவைத்தது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே உச்ச நீதிமன்றம்இந்த விசாரிக்கும்
அமலாக்க இயக்குனரகத்திற்கு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அமலாக்க இயக்குநரகத்தின் காவலை பொருட்படுத்தாமல் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மேலும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையே கேள்வியாக உள்ளது. விசாரணையை தாமதப்படுத்தவே இப்படி செய்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார். இதற்கு, "மருத்துவ வாரியம் ஒரு நபரை ஆரோக்கியமானவர் என்று அறிவித்த பிறகே நீங்கள் அவரை காவலில் எடுத்திருக்க வேண்டும்" என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த மனுவை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க இருப்பதால், அதற்கு முன் இதை விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.