மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்
மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் கொல்ஹாப்பூரில் கரும்பு விவசாயிகள் இன்று(நவ.,23) மும்பையில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு தங்களிடம் கொள்முதல் செய்த கரும்புகளுக்கு லாபகரமான விலை மற்றும் நியாயமான விலை(FRP) என்பதன் அடிப்படையில் கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கோரி இந்த சாலை மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவரும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜு ஷெட்டி, கடந்தாண்டு வாங்கிய கரும்புகளுக்கு ஒரு டன் எடைக்கு கூடுதலாக ரூ.100 வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
போராட்டம் காரணமாக வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது
இதனிடையே, கடந்தாண்டு கரும்பு வாங்கிய மில் உரிமையாளர்கள் பலரும் வரும் ஆண்டில் இருந்து கூடுதலாக ரூ.100 கொடுத்து கரும்பினை கொள்முதல் செய்வதாக கூறுகின்றனர். ஆனால் விவசாயிகள் கடந்த வருடம் வாங்கிய கரும்புகளுக்கு கூடுதல் தொகையினை கொடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று கூறி வருவதாக தெரிகிறது. விவசாயிகள் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு வருகிறது என்று கொல்ஹாப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டித் தகவல் அளித்துள்ளார். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.