மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2023ம் ஆண்டில் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவுள்ளனர்.
மருத்துவ படிப்பிற்கான 40,200 விண்ணப்பங்கள் பலப்பிரிவுகள் மற்றும் ஒதுக்கீட்டிற்கு கீழ் இந்தாண்டு பெறப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 28ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி கல்லூரிகளில் மாணவர்கள் சேரவேண்டும் என்று கூறப்பட்டது.
அதேபோல் 4 கட்ட கலந்தாய்வுகள் முடிந்தப்பின்னர் செப்டம்பர் 1ம் தேதி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ், சேர்ந்துள்ள மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
படிப்பு
அரசு பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும்
இதுகுறித்த செய்திக்குறிப்பில், தமிழக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் நோக்கில் 7.5% உள்ஒதுக்கீட்டினை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அதன்படி இந்த ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் கல்விக்கான கட்டணம், புத்தகம், தங்கும் விடுதி, உணவு என எதற்கும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவிகள் தமிழக அரசின் 'புதுமை பெண் திட்டம்' போன்ற அனைத்து பிரிவிலான கல்வி உதவித்தொகையினை பெற தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சில இடையூறுகள் இருப்பதால் அவர்கள்மீது கல்வி நிறுவனங்கள் அதிகளவு கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.