'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி
டெல்லி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று(ஆகஸ்ட்.,8) மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று(ஆகஸ்ட்.,9) ராகுல் காந்தி நடத்திய விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அமளியில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. அவரையடுத்து திமுக சார்பில் எம்.பி.கனிமொழி தனது வாதத்தினை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, "மணிப்பூர் விவகாரத்தில் 'இரட்டை எஞ்சின்' அரசு மக்களை கொல்லும் அரசாக உருமாறியுள்ளது. மணிப்பூர் விவகாரம் துவங்கி 3 மாதங்கள் ஆன நிலையில், அங்கு நடக்கும் படுகொலைகளை தடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார். மணிப்பூர் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ள காவல்துறை எவ்வித உதவியினையும் செய்வதில்லை" என்று பேசியுள்ளார்.
மிக விரைவில் இந்தியா உங்களுக்கு நல்லதொரு பாடத்தினை கற்பிக்கும்-எம்.பி.கனிமொழி
உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வுகாணும் நிலையில் நாடு உள்ளது என்றும் கனிமொழி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்காலத்தில் விலைவாசி மட்டும் உயரவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகளவில் நடந்து வருகிறது என்றும், தமிழக வரலாறு குறித்து மோடிக்கு என்ன தெரியும்?என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் அவர், "நாடாளுமன்றத்தில் செங்கோலினை வைத்துக்கொண்டு அது சோழர்காலத்தினை சேர்ந்தது என்று கூறினீர்கள். கண்ணகி கோபத்திற்கு ஆளான பாண்டியனின் செங்கோல் தகர்ந்த செய்தி உங்களுக்கு தெரியுமா?. எங்கள் மீது இந்தி மொழியினை திணிப்பதை நிறுத்திவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அதில் உங்களுக்கு தேவைப்படும் பாடங்கள் நிறைந்துள்ளது" என்றும் கூறியுள்ளார். இந்தியா உங்களுக்கு மிக விரைவில் நல்லதொரு பாடத்தினை கற்பிக்கும் என்றும் அவர் ஆதங்கத்தோடு பேசியது குறிப்பிடத்தக்கது.