அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு
தமிழ்நாடு மாநிலம் அரியலூரில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், தேவி, பூ தேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது. அதில் ஆஞ்சநேயர் சிலை மட்டும் அமெரிக்கா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஏலம் விடப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த ஆஞ்சநேயர் சிலையானது ஆஸ்திரேலியாவில் தனி நபர் ஒருவர் ஏலத்தில் எடுத்து வைத்திருப்பது வெளியானது. இந்த சிலையினை கையகப்படுத்த தமிழக போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், அந்த நபரே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
16-17ம்நூற்றாண்டினை சார்ந்த ஐம்பொன் சிலை நாடு திரும்பியது
அதனை தொடர்ந்து கும்பகோண நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த சிலையானது நேற்று(மே.,9)வெள்ளூர் கிராமமக்கள் முன்னிலையில் டிஜிபி சைலேஷ்குமார் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒப்படைத்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் பாரம்பரிய கலை பொருட்களை மீட்பதில் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. அதன் உதாரணமாகவே இந்த அரியலூர் மாவட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரீட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, நாட்டின் மதிப்புமிக்க பாரம்பரியம் வீடு திரும்புவதை உறுதிசெய்வதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது என்று பதிவுச்செய்துள்ளார். இதற்கிடையே கோயிலில் சிலையினை ஒப்படைத்த டிஜிபி சைலேஷ்குமார், இதன் மதிப்பு 15 லட்சம் இருக்கலாம் என்றும், இது 16-17ம்நூற்றாண்டினை சார்ந்த சிலையாகும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.