முதல்வர் விஜய் தனது அரசு இல்லத்தில் திடீர் ஆய்வு; 'வெற்றி இல்லம்' எனப் பெயர் மாற்றத் திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னையின் கிரீன்வேஸ் சாலையில் பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமணி இல்லத்தை தனது புதிய அதிகாரப்பூர்வ அரசு இல்லமாகவும் முகாம் அலுவலகமாகவும் மாற்றுவதற்காக இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து இல்லத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அலுவலகப் பிரிவுகளின் வடிவமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை அவர் விரிவாக ஆய்வு செய்தார்.
புதிய முடிவு
நீலாங்கரை பயணச் சர்ச்சையும் புதிய முடிவும்
தற்போது முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது சொந்த இல்லத்தில் வசித்து வருகிறார்.
அங்கிருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு பயணிக்கும் போது, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை காரணமாக அந்தச் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் தினசரி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாவதாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னை நகரின் மையப் பகுதியில் அமைந்த பசுமை வழிச்சாலைக்கு தனது இல்லத்தை மாற்ற முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.
பாமணி இல்லம்
பாமணி இல்லம் அதிநவீன வசதிகளுடன் தயார் நிலை
பல ஆண்டுகளாக அரசு விருந்தினர் இல்லமாக செயல்பட்டு வந்த பாமணி இல்லத்தைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக புதுப்பித்து வந்தனர்.
முதல்வர் தங்குவதற்கும், அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்துவதற்கும் ஏற்ப அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் முகாம் அலுவலக செயல்பாடுகளுக்காக நவீனத் தொடர்பு சாதனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கான கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்
'வெற்றி இல்லம்' எனப் பெயர் மாற்றத் திட்டம்?
சென்னைப் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் இல்லங்களுக்குத் தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தஞ்சாவூர் - திருவாரூர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆற்றின் கிளையான "பாமணி ஆறு" பெயரே இத்தில்லத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இப் புதுப்பிக்கப்பட்ட இல்லத்திற்கு 'வெற்றி இல்லம்' என்று பெயர் மாற்றம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் முதலமைச்சர் விஜய் தனது புதிய அலுவல்பூர்வ இல்லத்திற்கு குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.