தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை
நேற்று கூறியது போலவே, கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார். பச்சை வேட்டி அணிந்து, மேல் சட்டை அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த அண்ணாமலை, கயிறால் செய்யப்பட்ட சாட்டையால் தன்னைத் தானே அடித்து கொண்டார். ஏழு முறை சாட்டையால் தன்னைத் தானே அடித்தபின், எட்டாவது முறை அடிக்கும் போது பா.ஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். கசியவிடப்பட்டதற்கு காவல்துறையின் கவனக்குறைவு காரணம் என குற்றம் சாட்டினார்.
Twitter Post
மன்மோகன் சிங்கின் மறைவை ஒட்டி போராட்டம் வாபஸ்
மேலும், "நேற்றே என் காலணியை கழற்றிவிட்டேன். திமுக ஆட்சியிலிருந்து இறக்காமல் நான் காலணி அணியப்போவதில்லை" என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணத்தையொட்டி பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படும் என்றும் கூறினார். தமிழ்நாடு போலீசாரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆர் கசியவிடப்பட்டது என தமிழக காவல்துறை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அண்ணாமலை, முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில், எஃப்.ஐ.ஆர் கசியவிடுவது கண்டிப்பாக இதன் காரணமாக சாத்தியமில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த சட்டையடியை கடவுளுக்கு சமர்ப்பித்து திமுகவிற்கு எதிராக போராட்டம் தொடரும் என அறிவித்தார்.