ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்று அக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள உள் பிரகாரத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு யானை சிலைகள் இருந்தததாகவும், அந்த கற் சிலைகளை 10 ஆண்டுகளாக காணவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும், 2015ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது புதிதாக 3 கொடிமரங்கள் மரங்கள் வைக்கப்பட்டதாகவும், அப்போது, அங்கிருந்த பழைய கொடிமரங்கள் கோயிலுக்குள்ளேயே பத்திரப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிலில் வெள்ளை அடித்தவர்கள் மீது புகார்
அப்படி, கோயிலுக்குள்ளேயே வைக்கப்பட்ட 2 பழைய கொடிமரங்களை காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கோவிலில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகியோர் அந்த சிலைகளை கடத்தியதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்ற செய்தி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.