பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்
கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், "பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான பொய் பிரச்சாரங்களும் அதிகரித்து வருகின்றன. நம்மிடம் அனைத்து வகையான சட்டங்களும் உள்ளன. அந்த சட்டங்கள் திறம்பட பயன்படுத்தப்படலாம்." என்று கூறியுள்ளார்.
பெண்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் விஜயன்
மேலும், "பிரச்சினைகள் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். சமீபகாலமாக தனிமைப்பட்ட சில சம்பவங்களின் அடிப்படையில், கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போன்ற தவறான விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல." என்று கூறினார். பெண்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜயன் கூறினார். குடும்ப வன்முறையைத் தடுக்கவும், வரதட்சணையைத் தடுக்கவும், பாதுகாப்பான பணியிடங்களை உறுதிப்படுத்தவும் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் பாலின சமத்துவமும், பாலின நீதியும் நிலைநாட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.