செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சிகிச்சைக்கு பிறகு அமலாக்கத்துறையும் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. பின்னர் ஆகஸ்ட் 28வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்த பிறகு, சென்னையில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
ஜாமீன் வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ஜாமீனுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு புதன்கிழமை (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீது உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினார். இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், எனவே உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்துள்ளது.