
ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது
செய்தி முன்னோட்டம்
பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தும்கா மாவட்டத்தின் ஹன்ஸ்திஹா பகுதியில் நேற்று இரவு, ஒரு தற்காலிக கூடாரத்தில் இரவைக் கழிப்பதற்காக அந்த தம்பதிகள் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திய போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
"இந்த கூட்டு பலாத்கார சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது" என்று ஜார்முண்டி துணை பிரிவு போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட்
தம்பதியினரை கடுமையாக தாக்கிய குற்றாவளிகள்
சுற்றுலா தம்பதியினர் தும்கா வழியாக பீகாரின் பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஹன்ஸ்திஹா சந்தைக்கு அருகில் அவர்கள் இரவை கழிக்க நினைத்தனர்.
அவர்கள் இருசக்கர வாகனத்தில் வங்கதேசத்தில் இருந்து தும்காவை அடைந்து பீகார் வழியாக நேபாளம் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் அந்த தம்பதியினரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தும்காவில் உள்ள ஃபுலோ ஜானோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.