Page Loader
ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்

ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2025
01:58 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால், இத்தகைய சாகசமான பயணங்கள், பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதே ரயில்வேவின் கவலையாக உள்ளது. இதனால் சகபயணிகளுக்கும் தொந்தரவு ஏற்படுவதாக புகார்கள் எழுதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்த நிலையில், இது தொடர்பாக, தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 156ன் கீழ், படிக்கட்டுகளில் அமர்ந்து அல்லது தொங்கியபடி பயணிக்கும் நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கண்காணிப்பு

தீவிரபடுத்தப்பட்ட கண்காணிப்பு

ரயில்களில் இளம் வயதினர் செய்யு சாகச நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ரயில்களில் நடைபெறும் விதிமீறல்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பெட்டிகளில் நிறுவப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வது தடுக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக வலியுறுத்தும் ரயில்வே, அனைத்து பயணிகளும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பொதுப் போக்குவரத்தில் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணமே இன்றியமையாதது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.