காங்கிரஸில் பெரும் மாற்றம்: ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று தாக்கல் செய்தார். இன்று அதிகாலை அவர் தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரை மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதற்கிடையில், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸின் அகிலேஷ் பிரசாத் சிங் பீகாரிலும், அபிஷேக் மனு சிங்வி இமாச்சலப் பிரதேசத்திலும், சந்திரகாந்த் ஹண்டோர் மகாராஷ்டிராவிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்டனர்.
பிப்ரவரி 27 அன்று நடைபெற இருக்கும் மாநிலங்களை தேர்தல்
மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் கண்டிப்பாக ஒரு ராஜ்யசபா தொகுதியில் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேலும் 5 முறை மக்களவை எம்.பி.யாக பதவி வகித்த சோனியா காந்தி, முதல் முறையாக ராஜ்யசபாவில் போட்டியிட உள்ளார். மக்களவையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்தி அடுத்த பொதுத் தேர்தலில் மக்களவையில் போட்டியிட மாட்டார். 1999ல் காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முதலில் எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 56 ராஜ்யசபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றனர். மேலும் அந்த இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும்.