சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி
மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார். அதானி பிரச்னையை பேச வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் கோஷங்களோடு பிரதமரின் உரை இன்று ஆரம்பமானது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை நாடு தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், ஆனால், சில உறுப்பினர்களின் உரைகள் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். அண்மையில், மோடி மற்றும் அதானி பற்றி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்போது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 டாலராக அதிகரித்துள்ளது என்று கூறிய ராகுல்காந்தி, விதிகளை மீறி அதானிக்கு சாதகமாக மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து பேசியவை
ராகுல் காந்தியின் இந்த உரை, நாடுளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிப்பது போல் நேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் முன்னேற்றம் எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். "இந்த அவையில் பேசப்படுவதை நாடு கவனமாகக் கேட்டு கொண்டிருக்கிறது. ஆனால், சில எம்பிக்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். இந்த எம்பிக்களிடம் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் எவ்வளவு சேற்றை அள்ளி வீசுகிறீர்களோ, அவ்வளவு தாமரைகள் மலரும். காங்கிரஸ் (நாட்டின்) வளர்ச்சியில் தடைகளை உருவாக்கியது. சிறிய நாடுகள் எல்லாம் முன்னேறும் போது இந்தியா மட்டும் ஆறு தசாப்தங்களை இழந்ததுள்ளது. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஒருபோதும் அவர்கள் முயற்சிக்கவில்லை. " என்று காங்கிரஸை பிரதமர் சாடியுள்ளார்.