ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி
ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று(பிப் 8) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரை இருந்தது. அண்மையில், பிரதமர் மோடி மற்றும் கெளதம் அதானி பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்போது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 டாலராக அதிகரித்துள்ளது என்று கூறிய ராகுல் காந்தி, விதிகளை மீறி அதானிக்கு சாதகமாக மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த உரை நாடுளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தியைக் குறிப்பிடாமல் இன்று அவரை சாடி இருக்கிறார். பிரதமர் பேச ஆரம்பித்து சிறிது நேரம் கழித்தே ராகுல்காந்தி அவைக்கு வந்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதன் சுருக்கம்
இங்குள்ள பலருக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 'ஆராய்ச்சிகள்' மீது மோகம் உண்டு. அது போன்ற ஒவ்வொரு பெரிய பல்கலைக்கழகமும் காங்கிரஸின் வீழ்ச்சியையும் அதற்கு காரணமானவர்களையும் பற்றி ஆய்வு செய்யும் என்று நான் நம்புகிறேன். உள்ளுக்குள் இருக்கும் வெறுப்பு அவர்களின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. 2004 மற்றும் 2014க்கு இடையில், UPA(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) ஒவ்வொரு வாய்ப்பையும் ஒரு பிரச்சனையாக மாற்றியது. உலகம் தொழில்நுட்பத்தில் முன்னேறியபோது, அவர்கள் 2ஜி ஊழலில் சிக்கித் தவித்தனர். 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் முன்னேற்றத்தை உலகுக்குக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் ஒரு பெரிய மோசடியாக மாற்றப்பட்டது.