நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார். அந்த சட்டை திங்களன்று(பிப் 6) பெங்களூரில் நடந்த இந்திய எரிசக்தி வாரத்தின் போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அவருக்கு வழங்கியதாகும். அது ஒரு மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களால் ஆன சட்டை என்று கூறப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்று வரும் இந்திய எரிசக்தி வாரம்(6-8 பிப்ரவரி), ஆற்றல்-மாற்று சக்தியாக இந்தியாவின் வளரும் திறனை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியன் ஆயிலின் 'அன்பாட்டில்டு' முயற்சியின் கீழ், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன சீருடைகளை இந்திய எரிசக்தி வாரத்தில் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தும் பிரதமர்
பிளாஸ்டிக் பாட்டில்களை சீருடைகளாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகள் மிஷன் லைஃப் திட்டத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறி இருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர்(rPET) மற்றும் பருத்தியால் ஆன சீருடைகளை இந்தியன் ஆயில் ஏற்றுக்கொண்டது. இந்த சீருடைகள் சில்லறை வாடிக்கையாளர் உதவியாளர்கள் மற்றும் LPG விநியோக பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்தியன் ஆயிலின் ஒவ்வொரு சீருடைகளும் சுமார் 28 பயன்படுத்திய PET பாட்டில்களை மறுசுழற்சி செய்ய உதவும். சமீபத்தில் அரசாங்கம் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை Rs. 19,700 கோடி செலவில் தொடங்கியது. இது கார்பன் பயன்பாட்டை குறைத்து பொருளாதாரத்தை வளர செய்வதற்கும், எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் முன்மொழியப்பட்டது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் மறுசுழற்சியை ஆதரிக்க வலியுறுத்தியும் பிரதமர் இந்த சட்டையை அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.