வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது. மாற்றப்பட்ட இந்த வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக சிபிசிஐடி தற்போது கூறியுள்ளது.
சந்தேக நபர்கள் 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக 8 பேரிடம் நேற்று(பிப் 7) சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து, இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. வேங்கை வயல் பிரச்சனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான 8 பேரை நேற்று திருச்சிக்கு வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சிபிசிஐடி போலீஸும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததால் விசிக தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.