வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல். பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் சில வாரங்களுக்கு முன் மனித கழிவுகள் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதை அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரித்து உறுதி செய்தார். இந்நிலையில், இந்த தகாத காரியத்தை செய்த குற்றவாளிகளை கைது செய்யுமாறு பல நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர். ஆனால், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியாமலேயே இருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம்
இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள், காவல்துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை என்ற விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அவர் நேற்று சட்டமன்றத்தில் இது குறித்து பேசினார். குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர் என்று உறுதியும் அளித்தார். இதற்கிடையில், "தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!" என்று இயக்குநர் பா.ரஞ்சித் தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.