பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது
ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் 4 ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இன்று(ஏப் 17) ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, இராணுவ வீரர் மோகன் தேசாய், குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனிப்பட்ட தகராறு காரணமாக தனது சக ஊழியர்களை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 வீரர்களிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டதாக பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சாட்சியான மேஜர் அசுதோஷ் சுக்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
கொல்லப்பட்ட 4 வீரர்களின் பெயர்கள் சாகர், கமலேஷ், சந்தோஷ் மற்றும் யோகேஷ் என்று FIRரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். யோகேஷ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த 4 பேரும் இராணுவத்தின் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், இந்த துப்பாக்கி சூடு, தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இன்று ராணுவ வீரர் ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த சம்பவத்திற்கும் காலிஸ்தான் தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.