தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர்
சிங்கப்பூர் நாட்டின் போலி தூதரக பதிவு எண்ணுடன் டெல்லியில் வலம் வரும் கார் குறித்து, டெல்லி காவல்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, அந்நாட்டின் தூதர் சைமன் வோங் எச்சரித்துள்ளார். அந்தக் காரின் புகைப்படங்களை சிங்கப்பூர் தூதரகத்தின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிட்ட தூதர் சைமன் வோங், "கீழே உள்ள கார் 63CD பதிவு எண்னை கொண்ட கார் போலியானது. இது எங்கள் தூதரக கார் அல்ல." "டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எச்சரித்துள்ளோம். அதிக ஆபத்துகள் இருப்பதால், இந்த கார் கவனிக்கப்படாமல் நிறுத்தப்படுவதைப் பார்க்கும்போது கூடுதல் கவனமாக இருங்கள்." "குறிப்பாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில்" என பதிவிட்டுள்ளார்.
தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எவ்வாறு பதிவு எண் வழங்கப்படுகிறது
இந்தியாவில் ராஜாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில், நீலக் வண்ண, இலக்கத்தகட்டில்(நம்பர் பிளேட்), வெள்ளை வண்ணத்தில் வாகன பதிவு எண் எழுதப்பட்டிருக்கும். மேலும் அந்த தகட்டில், CD என்ற எழுத்துக்களுடன் இரண்டு இலக்க குறியீடு மற்றும் பதிவு எண் இடம்பெறும். தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக பணிகள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, இவ்வகை பதிவு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் CD என்பது கார்ப்ஸ் டிப்ளமோடிக்(Corps Diplomatique) என்பதைக் குறிக்கிறது. கடந்த மாதம் தூதர் வோங், சிங்கப்பூர் தூதரகத்தின் அருகில் இருந்த பலகையில் இருந்த எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.