கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம்
கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சலனம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களுக்கு தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். நேற்று, காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு, யார் முதல்வர் ஆக வேண்டும் என்பது குறித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்த வாக்குகளை சேகரித்த குழு, இன்று காலை 10 மணிக்கு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேசிய தலைமையுடன் ஆலோசனை நடத்த உள்ளது.
இறுதி முடிவை மல்லிகார்ஜூன் கார்கே எடுக்க இருக்கிறார்
இந்நிலையில், சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கட்சி அழைத்தால் மட்டுமே டெல்லிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவை மல்லிகார்ஜூன் கார்கே எடுக்க இருக்கிறார். நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் சுஷில் குமார் ஷிண்டே, தீபக் பபாரியா, ஜிதேந்திர சிங் அல்வார் ஆகியோர் வாக்குகளை சேகரித்தனர். இந்த சந்திப்பு நடந்த பெங்களூரு ஹோட்டலுக்கு வெளியே டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரின் ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பினர். கர்நாடகாவின் புதிய முதல்வரும், அமைச்சர்களும் வியாழக்கிழமை பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.