Page Loader
சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 
சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்

சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

எழுதியவர் Nivetha P
Oct 18, 2023
02:11 pm

செய்தி முன்னோட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது. அப்போது திடீரென அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து நேற்று(அக்.,17)விபத்து நேர்ந்த நிலையில் 13 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியது. இச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்தோர் உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டதால் அடையாளம் தெரியாமல் உறவினர்கள் கதறியது பார்ப்போர் நெஞ்சை உலுக்கியது. இதனிடையே, பாக்கியலட்சுமி, செல்லம்மாள், முனீஸ்வரி, லட்சுமி, முத்துலட்சுமி ஆகியோர் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் 6 பேர் கொண்டு மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்ய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரேத பரிசோதனை செய்து முடித்த உடல்களை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து திடீரென போராட்டம் செய்ய துவங்கினர் என்று கூறப்படுகிறது.

போராட்டம் 

200க்கும்-மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு 

அப்போது பட்டாசுக்கடை உரிமையாளர்களிடமிருந்து தலா ரூ.5.50 லட்சமும், தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சத்தையும் பெற்றுத்தருவதாகக்கூறி காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணத்தொகையாக ரூ.25லட்சம் கொடுக்கவேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவியது. இதனிடையே இவர்களிடம் மாவட்ட கூடுதல் எஸ்.பி.சூர்யமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள்.,அர்ச்சனா, ஜெகநாதன் உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் பாக்கியலட்சுமி என்பவரது உறவினர்கள் மட்டும் இதற்கு உடன்பட்டு சடலத்தை வாங்க சம்மதித்தனர். அவர்களிடம் பட்டாசுக்கடை உரிமையாளர் சார்பில் ரூ.5 லட்சம் காசோலை மற்றும் ரூ.50ஆயிரம் ரொக்கம் கொடுத்து அவரது உடலை அனுப்பிவைத்துள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் பாதுகாப்பு கருதி 200க்கும்-மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.