தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி
தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக மருத்துவத்துறை சார்ந்த வலிநிவாரணிகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வலிநிவாரணிகளை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, 'தமிழகத்தில் பான் மசாலா, புகையிலை போன்ற 391வகை போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடையினை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து கடந்த மே மாதமே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்' என்று கூறினார்.
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த டிசம்பர் 11ம்.,தேதி முதல் 26ம்.,தேதிவரை நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும், 'இதுவரை சுமார் ரூ.37.70லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 1,400 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார். மேலும் அவர், 'இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதன்முறை ரூ.5000அபராதம், 2ம்-முறை சிக்கினால் ரூ.10,000அபராதம், 3ம்-முறை சிக்கினால் ரூ.25,000அபராதம் விதிக்கப்படுவதோடு, கடைக்கு சீல் வைக்கப்படும் என்னும் நடைமுறை இருந்தது' என்றுக்கூறிய அவர், "இனி முதன்முறையே உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்" என்றும், "மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால் அந்த மருந்தகங்கள்மீது கடும் நடவடிக்கை பாயும்" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.