நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்
நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர். விமானம் சிட்னியில் தரையிறங்கிய பிறகு மூன்று பயணிகள் மருத்துவ உதவியைப் பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் B787-800 விமானம் கடுமையாக குலுங்கியதால், அந்த விமானத்தில் பயணித்த ஏழு பயணிகளுக்கு உள்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. "2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அன்று ஏர் இந்தியாவின் விமானம் AI302, டெல்லியில் இருந்து சிட்னிக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது ஆட்டம் கண்டது. அதனால், விமானத்தில் இருந்த பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது." என்று ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடுமையான குலுங்கல் காரணமாக ஏழு பயணிகளுக்கு சிறு சுளுக்கு ஏற்பட்டது
"விமானம் சிட்னியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மூன்று பயணிகள் வந்தவுடன் மருத்துவ உதவியைப் பெற்றனர். அவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார். "விமானத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்த அறிக்கை, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கடுமையான குலுங்கல் காரணமாக ஏழு பயணிகளுக்கு சிறு சுளுக்கு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற இன்னொரு சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் பதிவானது. அப்போது, 195 பயணிகளுடன் மும்பையில் இருந்து தர்பங்கா கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம், கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பயணிகளில் ஒருவர் நீண்டநேர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.