செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனிடையே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை அவரை அண்மையில் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டநிலையில், தற்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இதனையடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 இலக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை அங்கீகரிக்காத தமிழகஆளுநர், செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, வேலைவாங்கி தருவதாக பணத்தினை லஞ்சமாகப்பெற்ற வழக்குகள் இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார். இவரின் இந்த உத்தரவிற்கு பலத்தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும்,கண்டனங்களும் எழுந்தது.
ஆளுநர் தனது முடிவினை வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை
எதிர்ப்புகள் வலுத்த காரணத்தினால் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திலேயே தனது உத்தரவினை நிறுத்திவைப்பதாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பினார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவினை நிறுத்தி வைப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் எழுதிய கடிதத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசியல் சாசனப்படி, ஆளுநர் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்ய இயலாது, நீதிமன்றம் தான் அதனை நீதித்துறை ஆய்விற்கு உட்படுத்த முடியும். ஆளுநர் தனது முடிவினை வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.