
"செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்":முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அண்மையில் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் தற்போது பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 இலக்காக்கள் வேறு இருவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லா அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனை அங்கீகரிக்காத தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை, வேலை வாங்கி தருவதாக பணத்தினை லஞ்சமாக பெற்ற வழக்குகள் இருப்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
எதிர்ப்புகள்
அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரின் கருத்துக்கள் எதிரானது - மு.க.ஸ்டாலின்
இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தது.
மேலும், செந்தில் பாலாஜியினை பதவிநீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியின் பதவிநீக்க உத்தரவினை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
மேலும் இதுகுறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தப்போவதாகவும் நேற்று(ஜூன்.,29)நள்ளிரவு தெரிவித்தார்.
இது தொடர்பாக ஓர் கடிதத்தினையும் அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு பதில் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில்,"செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் கூறிய கருத்துக்கள் எதிரானது. அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.