புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொண்டு தேவைப்படும் சிகிச்சைகள் அனைத்தும், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, நீதிமன்ற உதவியை நாடினர். அதன்பிறகு, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கிடையே, அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததை அடுத்து, மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டார்.
கைது செல்லும் என அறிவித்த அமர்வு நீதிபதி
இந்த மூன்றாவது நீதிபதி, சென்ற வாரம், பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி, தான் குற்றமற்றவர் என விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மருத்துவமனை சிகிச்சைக்கு பின், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, தேவைப்பட்டால், அங்கே சிகிச்சையை தொடரலாம் எனவும், வரும் 26ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.