செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பைபாஸ் சர்ஜரி செய்து சிகிச்சைப்பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைதுச்செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வுமனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையினை 2 நீதிபதிகள் மேற்கொண்டநிலையில், அவர்கள் இருவரும் மாறுபட்ட வெவ்வேறு 2 தீர்ப்புகளை வழங்கினர். மேலும், இதன் காரணமாக 3மவது நீதிபதியினை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியநிலையில், தலைமை நீதிபதிக்கு 2 நீதிபதிகளும் பரிந்துரை செய்திருந்தனர். இதனையடுத்து, இவ்வழக்கினை விசாரிக்க அண்மையில் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் அவர்களை சென்னை உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நியமித்து உத்தரவிட்டார்.
இரு தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது
இந்நிலையில், இந்த வழக்கானது நேற்று(ஜூலை.,6) பிற்பகல் நேரத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் இந்த வழக்கினை ஜூலை 7ம் தேதி(இன்று) ஒத்திவைத்துள்ளார். அதன்படி மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை மேற்கொண்ட பொழுது, அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அமைச்சரின் மனைவி மேகலா தரப்பான வாதங்களும் முன்வைக்கப்பட்டது. பின்னர் இருதரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிகிறது. இதன் பின்னர், இந்த வழக்கினை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.