ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அந்த தாமிர சுரங்கத்தில் லிப்ட் இடிந்து விழுந்ததில் விஜிலென்ஸ் குழு உட்பட 15 பேர் சிக்கினர். சிக்கியிருந்த மற்ற 14 அதிகாரிகள் நேற்று இரவோடு இரவாக மீட்கப்பட்டனர். ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே, கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவுடன் சுரங்கத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, லிப்ட் சுமார் 577 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளானது.
இரவோடு இரவாக நடந்த மீட்பு பணி
தற்போது பாண்டேவின் உடல் சுரங்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. சிக்கிய அதிகாரிகளில் கெத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் பிரிவு தலைவர் ஜி.டி.குப்தா மற்றும் கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா ஆகியோர் அடங்குவர். விஜிலென்ஸ் குழுவுடன் புகைப்படக் கலைஞராக சுரங்கத்திற்குள் நுழைந்த பத்திரிகையாளரும் இந்த விபத்தில் சிக்கினார். முதலில் மீட்கப்பட்ட மூன்று அதிகாரிகள் எலும்பு முறிவுகள் மற்றும் பிற காயங்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இரண்டாவது சுற்றில் மேலும் ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அதன் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் இரவோடு இரவாக மீட்கப்ட்டனர். முன்னதாக, சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு வெளியேறும் வாயில் வழியாக சுரங்கத்திற்குள் அனுப்பப்பட்டது.