மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அண்மை காலமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இதர பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, போட்டி தேர்வு நடக்கும் ராஜஸ்தான் கோட்டாவில் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகளை தடுக்க 'உம்மீட்' என்னும் வழிகாட்டு வரைவினை மத்திய பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளி முதல்வர் தலைமையிலான பள்ளி நலக்குழு ஒன்றினை அமைக்கலாம். அதிலுள்ள உறுப்பினர்கள் தற்கொலை போன்ற நெருக்கடியான சூழலை கையாளுவதற்கான தகுதி கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தோல்வி பயத்தினை களைக்க முயற்சி செய்ய வேண்டும்
மேலும் அந்த வரைவில், மன அழுத்தத்தில் மாணவர்கள் இருந்தால், பெற்றோர் அல்லது அதனை அறியும் சமூகத்தினை சேர்ந்தோர் நலக்குழுவிடம் கூறி, தற்கொலை எண்ணத்தை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பள்ளியில் தோல்விகளை கண்டு அஞ்சுதல், சக மாணவர்களோடு ஒப்பிடுதல், படிக்க பயப்படுவது, வெற்றியின் அளவீடுகளை எண்ணி பயப்படுவது, தோல்வியினை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீளாமல் தவிப்பது போன்றவைகளை நீக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அந்த வரைவில், இருண்ட தாழ்வாரங்களை ஒளிர செய்தல், தோட்ட கலை, காலியான வகுப்பறைகளை பூட்டி வைத்தல் போன்ற பணிகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.