வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை லோக்சபா தேர்தலுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தற்போது தேர்தல் செயல்முறை நாடு முழுவதும் அமலில் இருக்கும்போது அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உத்தரவிட முடியாது என்று கூறியது. "நாளை ஆறாவது கட்ட தேர்தல். இந்த வழக்கை தேர்தலுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று பெஞ்ச் கூறியது.
தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு
மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது,"இந்த மனு சந்தேகம் மற்றும் அச்சத்தின் அடிப்படையில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது ஒரு கடினமான பணியாகும், இது போன்ற சுயநலங்கள் தலையிட அனுமதிக்கக்கூடாது," என்று தேர்தல் ஆணையம் கூறியது. மனுவின்படி, மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு விவரம் முறையே 11 மற்றும் 14 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.