Loading...
மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பது அரசியல்சாசனத்தின் ஆன்மாவை அழிப்பதற்குச் சமம்: உச்சநீதிமன்ற நீதிபதி
NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நீதிபதி உஜ்ஜல் புயான்

மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பது அரசியல்சாசனத்தின் ஆன்மாவை அழிப்பதற்குச் சமம்: உச்சநீதிமன்ற நீதிபதி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
09:29 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) நடவடிக்கையின் போது லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை பெருமளவில் பறிப்பது அரசியல் சாசனத்தின் ஆன்மாவையே தாக்குவதற்கு சமம் என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் எச்சரித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய நீதிபதி உஜ்ஜல் புயான் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கருத்து

"இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சி"

"கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் தன்னிச்சையானது. அதற்கு எந்தக் காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது".

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள், வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள் என இருவகை குடிமக்களை உருவாக்கவில்லை. வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பது குடிமக்களைத் தங்கள் சொந்த நாட்டிலேயே 'இரண்டாம் தர குடிமக்களாக' மாற்றுவதற்குச் சமம்."

"இத்தகைய மொத்த அளவிலான வாக்காளர் நீக்கம், அரசியலமைப்பின் சரத்து 326 (வயதுவந்தோர் வாக்குரிமை) மற்றும் சரத்து 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) ஆகியவற்றைத் தெளிவாக மீறுகிறது".

வாக்களிக்கும் உரிமை

"அரசியலமைப்பிற்கு மேல் யாரும் இல்லை"

ஒரு குடிமகனின் அடையாளத்திலிருந்து வாக்களிக்கும் உரிமையைப் பிரிப்பது உடலிலிருந்து ஆன்மாவை பிரிப்பதற்கு சமம் என்று குறிப்பிட்ட நீதிபதி, "அரசியலமைப்பின் சரத்து 326-ஐ எந்தவொரு அதிகார அமைப்பும் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது".

"எந்தவொரு நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளிக்காது. இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேல் எந்த அதிகார அமைப்பும் கிடையாது."

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறிய "ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" என்ற கோட்பாட்டினை நினைவு கூர்ந்த அவர், கோடீஸ்வரராக இருந்தாலும் சரி, கூலித்தொழிலாளியாக இருந்தாலும் சரி இருவருக்கும் வாக்களிக்கும் உரிமையில் சம பங்கு உண்டு என்பதை நீதிபதி வலியுறுத்தினார்.

மக்களாட்சியின் அடிப்படை கட்டமைப்பைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT