ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தனக்கு எதிராக நின்று போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவை வென்று 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். இந்நிலையில், இவரது இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல சொத்து விவரங்களை அவர் மறைத்துள்ளார். மேலும் தேர்தலின் போது அதிகளவு பணப்பட்டுவாடா நடந்தது என்று கூறப்பட்டிருந்தது.
2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு
இம்மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத்குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று கடந்த ஜூலை 6ம்தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து மேல்முறையீடு செய்ய தீர்ப்பினை நிறுத்தி வைக்குமாறு ரவீந்திரநாத் தரப்பில் கேட்டுக்கொண்டதையடுத்து நீதிபதி 30 நாட்களுக்கு தனது தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாகக்கூறி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தேனி மாவட்ட எம்.பி.ரவீந்திரநாத் தனது வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்படி, அந்த மனு மீதான விசாரணை இன்று(ஆகஸ்ட்.,4)நடந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதித்த உச்ச நீதிமன்றம் 2 வாரங்களில் இருத்தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கின் அடுத்த விசாரணையினை அக்டோபர் 4ம்தேதிக்கு ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.