Page Loader
ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 
ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்

ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் 

எழுதியவர் Nivetha P
Jul 06, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தனக்கு எதிராக நின்று போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவை வென்று 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். இந்நிலையில், இவரது இந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல சொத்து விவரங்களை அவர் மறைத்துள்ளார். மேலும் தேர்தலின் போது அதிகளவு பணப்பட்டுவாடா நடந்தது என்று கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து இந்த தேர்தல் வழக்கு குறித்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை 

ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை - 30 நாட்களுக்கு தனது தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாகக்கூறி உத்தரவு 

முன்னதாக இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு 3 முறை நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் கூறியதாக தெரிகிறது. அவரைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஆஜராகி சாட்சியம் கூறியுள்ளார்கள். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று(ஜூலை.,6)பிற்பகல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் இந்த வழக்கின் தீர்ப்பினை அளித்துள்ளார். மக்களவை தேர்தலில் ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை தொடர்ந்து, ரவீந்திரநாத் தரப்பில் மேல்முறையீடு செய்ய தீர்ப்பினை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 30 நாட்களுக்கு தனது இந்த தீர்ப்பினை நிறுத்தி வைப்பதாகக்கூறி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.