பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
செய்தி முன்னோட்டம்
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த சிறுமியின் ஒவ்வொரு மணி நேரமும் அவளுக்கு முக்கியமானது என்று கூறி இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
முன்னதாக கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுத்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க ஒரு குழுவை அமைக்குமாறு மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், செயல்முறைக்கான செலவை மகாராஷ்டிர அரசு ஏற்க ஒப்புக்கொண்டதையும் உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
உச்ச வரம்பு
உச்ச வரம்பை தாண்டியதால் உடனடியாக மருத்துவ அறிக்கையை கேட்ட உச்ச நீதிமன்றம்
2023ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாய் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
சிறுமியின் தாயின் கூற்றுப்படி, அவரது மகள் பிப்ரவரி 2023இல் காணாமல் போனார்.
பின்னர் மூன்று மாதங்களுக்கு கழித்து ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் கருக்கலைப்பு சம்மந்தமாக சிறுமியின் உடல் மற்றும் உளவியல் நிலை குறித்து மும்பை சியோன் மருத்துவமனையிடம் அறிக்கை கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.
தற்போது அந்த அறிக்கையின்படி உடனடியாக கருக்கலைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கருச்சிதைவு சட்டத்தின் கீழ், திருமணமான பெண்களுக்கும், கற்பழிப்புக்கு ஆளானவர்கள் உட்பட சிறப்புப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும், 24-வாரங்கள்தான் கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு.