Loading...
யூடியூபர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: பெண் செய்தி வாசிப்பாளர் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

யூடியூபர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: பெண் செய்தி வாசிப்பாளர் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
09:06 am

செய்தி முன்னோட்டம்

சன் டிவி முன்னாள் பெண் செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி தொடர்ந்த அவதூறு மற்றும் துன்புறுத்தல் வழக்கில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் 'சவுக்கு' சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு சன் டிவி முன்னாள் செய்தி வாசிப்பாளரான மகாலட்சுமி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளையும் போலி ஆவணங்களையும் வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அப்பதிவுகளை நீக்கக் கோரியபோது சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை அச்சுறுத்தி பணம் கோரியதாகவும் குற்றம் சாட்டினார்.

வழக்கு

வழக்கு விவரம்

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் குற்றவாளி என உறுதிசெய்து 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய வழக்குகள்

முந்தைய வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை

DVAC முன்னாள் ஊழியரான ஏ. சங்கர், 'சவுக்கு' என்ற பெயர் மூலம் யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகராகப் பிரபலமானார்.

2008-இல் உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் கசிந்த வழக்கில் கைதான இவர், பின்னர் தனது இணையதளம் மற்றும் நேர்காணல்கள் மூலம் அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

கடந்த 2022-இல் நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளதாகப் பேசிய குற்றத்திற்காக சென்னை உயர் நீதிமன்றம் இவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. அடுத்து மே 2024-இல் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கோவை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தற்போது மற்றொரு அவதூறு வழக்கை அவர் எதிர்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT