ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 20) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. ஒரே பாலின திருமணங்கள் குறித்து நடைபெறும் மூன்றாவது நாள் விசாரணை இதுவாகும். வரும் திங்கள்கிழமையும் இதே விசாரணைகள் தொடரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா, ஹிமா கோஹ்லி ஆகிய ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. ஒரே பாலின உறவுகளை வெறும் உடல் ரீதியான உறவுகளாக மட்டுமல்லாமல், அதை நிலையான, உணர்ச்சிபூர்வமான உறவுகளாக நாங்கள் பார்க்கிறோம்." என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று கூறினார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய கருத்துக்களின் ஹைலைட்டுகள்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் திருமணம் என்ற வளர்ந்து வரும் கருத்தை நாம் மறுவரையறை செய்ய வேண்டும். திருமணம் செய்து கொள்பவர்கள் இரும பாலினத்தைச்(ஆண்,பெண்) சேர்ந்தவர்களாக இருப்பது அவசியமான ஒன்றா? தன் பாலின ஈர்ப்பை குற்றமற்றதாக்கியதன் மூலம், ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையேயான உடல் உறவுகளை மட்டும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை, ஒரே பாலினத்தை சேர்ந்த இருவரின் நிலையான உறவையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம். எதிர்பாலின(Heterosexual) தம்பதியர் குழந்தைகளை நன்றாக பார்த்து கொள்வார்கள் என்று என்ன நிச்சயம் இருக்கிறது. எதிர்பாலின தம்பதியரின் குழந்தை குடும்ப வன்முறைக்கு ஆளானால் என்ன செய்வது? அந்தக் குழந்தை சாதாரண சூழ்நிலையில் வளருமா? என்று கூறியுள்ளார்.