ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 19) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. நாளையொடு இந்த விசாரணைகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா, ஹிமா கோஹ்லி ஆகிய ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விசாரணையின் தொடக்கத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடந்துகொண்டிருக்கும் இந்த சட்டப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
LGBT சமூகத்தினரின் போராட்டங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: வழக்கறிஞர்கள்
மனுதாரர் ஒருவரின் சார்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "அரசே முன் வந்து ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார். ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கினரின் கருத்து" என்று மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது. இது குறித்து பேசிய, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பிற வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கருத்தை கடுமையாக சாடினர். மேலும், "அப்படி கூறுவது வீடுகளை விட்டு வெளியேறி சமூகத்தில் போராடி கொண்டிருக்கும் LGBT சமூகத்தினரின் போராட்டங்களை புறக்கணிக்கும் வாதம்." என்றும் அவர்கள் கூறினர். திருமணங்களை நிர்வகிக்கும் தனிப்பட்ட சட்டங்களுக்குள் செல்லாமல் சிறப்பு திருமண சட்டத்திற்கு கீழ் மட்டுமே இந்த வாதங்கள் கேட்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.