Page Loader
ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை  
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை  

எழுதியவர் Sindhuja SM
Apr 17, 2023
01:14 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்ப முறைக்கு ஒரே பாலின திருமணங்கள் ஏற்றதல்ல என்று ஒரு மாதத்திற்கு முன் மத்திய அரசு கூறி இருந்தது. இந்நிலையில், ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளுக்கு எதிரான ஒரு "நகர்ப்புற உயரடுக்கினரின் கருத்து" என்று மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

details

"இந்த முடிவை உச்சநீதிமன்றம் அல்ல, நாடாளுமன்றம் தான் எடுக்க வேண்டும்"

மேலும், ஒரேபாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த மனுக்கள் "நகர்ப்புற உயரடுக்கினரின் கருத்து" என்றும் இது நாட்டு மக்கள் அனைவரின் கருத்து அல்ல என்றும் மத்திய அரசு வாதிட்டுள்ளது. "நாட்டு மக்கள், மத பிரிவுகள் ஆகியவற்றின் கருத்துக்களை முன் நிறுத்தி இதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதுவும் இந்த முடிவை உச்சநீதிமன்றம் அல்ல, நாடாளுமன்றம் தான் எடுக்க வேண்டும்" என்றும் மத்திய அரசு கூறி இருக்கிறது. "அவர்களுக்கு உரிமைகளை வழங்குவது, அவர்களது உறவை அங்கீகரிப்பது, அத்தகைய உறவுக்கு சட்டப்பூர்வ புனிதத்தை வழங்குவது ஆகியவற்றை சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும், நீதித்துறையால் அல்ல" என்று மேலும் மத்திய அரசு கூறியுள்ளது.