Page Loader
ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு
தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர்(LGBTQ+) வாழ்கின்றனர்.

ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு

எழுதியவர் Sindhuja SM
Mar 13, 2023
10:48 am

செய்தி முன்னோட்டம்

நாட்டில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து மத்திய அரசு நேற்று(மார் 12) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது. தற்போதுள்ள "இந்திய குடும்ப" அமைப்பை செயல்படுத்தும் போது, ​​தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை பதிவு செய்வது தனிப்பட்ட சட்டங்களை மீறும் என்றும் நாட்டில் "ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளை" சீர்குலைக்கும் என்றும் அரசாங்கம் வாதிட்டுள்ளது. தோராயமான மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர்(LGBTQ+) வாழ்கின்றனர். செப்டம்பர் 2018 அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377இன் சில பகுதிகளைத் நீக்கி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமற்றது என்று கூறியது.

இந்தியா

எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றிணைவதே திருமணமாகும்: மத்திய அரசு

இருப்பினும், இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களை சட்டபூர்வமாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்ப முறைக்கு ஒரே பாலின திருமணங்கள் ஏற்றதல்ல என்று கூறிய மத்திய அரசு, "திருமணம் என்ற கருத்தாக்கமானது, எதிர் பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒன்றிணைவதாகும். இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டப்பூர்வமாகவும்... திருமண சட்டங்களில் வேரூன்றியுள்ளது. இந்த வரையறை நீதித்துறையினால் தொந்தரவு செய்யப்படவோ நீர்த்துப்போகவோ கூடாது." என்று கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி நான்கு ஒரே பாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு இந்த கருத்துக்களை கூறியுள்ளது.