சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக பெங்களூரு மற்றும் நிலக்கல் இடையே பேருந்து சேவை: KSRTC அறிவிப்பு
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சமீபத்தில் பெங்களூரிலிருந்து நிலக்கல் (சபரிமலை யாத்திரையின் தளம்) வரை புதிய பேருந்து சேவையை அறிவித்துள்ளது. கேரளாவில் சபரிமலை யாத்திரை தொடங்கும் இடமான நிலக்கல் மற்றும் பெங்களூரு இடையே புதிய வால்வோ பேருந்து சேவை நவம்பர் 29 அன்று தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெங்களூரு சாந்திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 1:50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு நிலக்கல் வந்தடையும். திரும்பும் பயணம் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வழி பயணத்திற்கு ஒவ்வொரு பயணிக்கும் ஒரு டிக்கெட்டின் விலை ₹1,750.
தமிழகத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 15ம் தேதி முதல் 16.01.2025 வரையில் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.