"ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவும் ரஷ்யாவும் "நிலையான மற்றும் மிகவும் நட்பான" உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் ரஷ்யாவின் நீண்டகால நட்புக்கு ஆதரவாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின் படி, ரஷ்ய-உக்ரைன் போரால் கடந்த டிசம்பர் மாதம் முதல் 70,000 க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை
"எல்லோரும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உறவை பேணுகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், ரஷ்யா எங்கள் நலன்களை ஒருபோதும் புண்படுத்தியல்லை. நாங்கள் எப்போதும் நிலையான மற்றும் மிகவும் நட்புறவான உறவைக் கொண்டுள்ளோம்..." என்று அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 2022 இல் விளாடிமிர் புடின் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்தியா-ரஷ்யா உறவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யா, உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. அந்த தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.