தடையை மீறி ரயில்களில் பட்டாசுகள் எடுத்து சென்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பண்டிகையின் போது பட்டாசுகளால் எவ்வித விபத்துகளும் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் போக்குவரத்து காவல்துறை தங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், ரயில்வே எஸ்.பி.சுகுணா சிங் இன்று(நவ.,8) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் உயரதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.
திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க க்ரைம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
மேலும் அவர், "பண்டிகை காலத்தினையொட்டி மக்களுக்கு காவல்துறை எடுத்துரைக்கும் அறிவுரைகளுள் முக்கியமான ஒன்று, பட்டாசுகள் எக்காரணம் கொண்டும் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரவோ, ரயில்கள் மூலம் எடுத்து செல்லவோ கூடாது என்பதாகும்" என்று தெரிவித்துள்ளார். இதனை மீறி ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்ல முயன்றால் ஆர்.பி.எப். மூலம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே ரயில்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க க்ரைம் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.