முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்; சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ். கர்ணன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். 72 வயதான அவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பின்னணி
விருத்தாச்சலத்தில் பிறந்து உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணம்
சி.எஸ். கர்ணன் 1955 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பிறந்தார்.
சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றிய இவர், தனது திறமையால் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அங்கு பல முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கினார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவர், 2017 ஆம் ஆண்டு நீதித்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார்.
மோதல் போக்கு
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடனான மோதலும் கொல்கத்தா பணியிட மாற்றமும்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலகட்டத்தில் சி.எஸ். கர்ணன் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவர் பகிரங்கமாக ஊழல் புகார்களைத் தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்க அவர் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தார்.
இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சிறைத்தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை அனுபவித்த வரலாறு
கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவே கர்ணன் கைது ஆணை பிறப்பித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இதனால் அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையும் ஏற்க மறுத்ததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு 6 மாத சிறைவாசம் அனுபவித்த முதல் நீதிபதி இவராவார்.