குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர்
இன்று இந்தியா தனது 75 வது குடியரசு தின கொண்டாட்டங்களுடன் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்ட உள்ளது. இதனையடுத்து, டெல்லி கர்தவ்யா பாதையில் ஒரு பெரிய அணிவகுப்பை இந்தியா நடத்தவுள்ளது. இந்த அணிவகுப்பில் இந்தியாவின் இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை காட்சிப்படுத்தப்படும். இந்த வருடம் முக்கியமாக நாரி சக்தி அல்லது பெண்கள் அதிகாரமளிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கபட உள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் இணைந்து விழாவிற்கு தலைமை தாங்க உள்ளார். முதன்முறையாக அனைத்து பெண்களையும் கொண்ட முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் இராணுவ வன்பொருள்கள்
பதினைந்து பெண் விமானிகள் இந்திய விமானப்படையின் ஃப்ளை-பாஸ்ட்டில் ஒரு பகுதியாக இருப்பார்கள். மத்திய ஆயுதக் காவல் படைகளின்(CAPF) குழுவும் பெண் பணியாளர்களை மட்டுமே கொண்டிருக்கும். குடியரசு தின விழா அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள் பாரம்பரிய இராணுவ இசைக்குழுக்களுக்கு பதிலாக சங்க், நாதஸ்வரம் மற்றும் நாகாதா போன்ற இந்திய இசைக்கருவிகளை முதன்முறையாக வாசிக்க உள்ளனர். ஏவுகணைகள், ட்ரோன் ஜாமர்கள், கண்காணிப்பு அமைப்புகள், வாகனத்தில் பொருத்தப்பட்ட மோட்டார்கள் மற்றும் BMP-II காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு இராணுவ வன்பொருள்களை இந்தியாவின் ஆயுதப்படைகள் காட்சிப்படுத்தும். இன்று காலை 10:30 மணிக்கு தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியவுடன் குடியரசு தின விழா தொடங்கும்.