கோத்தகிரி சாலைகளில் சீரமைப்பு பணிகள் நிறைவுற்று, போக்குவரத்து துவங்கியது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பொழிந்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் இரவில் துவங்கி அதிகாலை வரை மிக கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் அமைந்துள்ள ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரியில் 130 செ.மீ.,கனமழை பதிவாகியுள்ளது.
அதன்படி, கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாமரம், முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் ராட்சத காட்டு மரங்கள் சரிந்து விழுந்துள்ளது.
இதேபோல் கேர்பெட்டா பிரிவு பகுதியிலும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளது.
சாலை
மண் சரிவுகள் ஏற்பட்டதோடு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தது
மேலும் அப்பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதோடு, பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தது.
இதன் காரணமாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிகளுக்கு விரைந்த மீட்பு படையினர் இன்று காலை முதல் இந்த மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி, அதி கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளும், சாலையில் உருண்டு விழுந்த பாறைகளும் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதனை தொடர்ந்து தற்போது கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.