தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்
தமிழ்நாடு பாட புத்தகங்களில் நிகழ்தகவை(Probability) என்னும் பிரிவினை மாணவர்கள் கையாள கற்றுக்கொள்ளவதற்காக பகடை மற்றும் சீட்டு கட்டு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. தற்போதுள்ள நிலையில் இந்த சீட்டுக்கட்டு கணக்குகள் பள்ளி மாணவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தினை விதைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் புகார்களை அடிப்படையாக கொண்டு தமிழகத்தின் அனைத்து வகுப்பு பாடப்புத்தங்களில் இருந்தும் சீட்டு கணக்குகள் நீக்கப்படுகிறது என்று தமிழக அரசு அண்மையில் ஓர் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பின் பாடப்புத்தகங்களில் இருந்து இந்த கணக்கு சம்பந்தமான 5 வினாக்கள் நீக்கப்பட்டு, வேறு 2 புது வினாக்கள் சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பணத்தை இழந்து ஆன்லைன் ரம்மி விளையாடியோர் பலர் தற்கொலை
இதனை தொடர்ந்து, 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், 'முழுக்கள்' என்னும் தலைப்பினை கொண்ட பாடம் மூன்றாம் பருவ பாட நூலில் சீட்டுக்கட்டினை உதாரணமாக கொண்டு கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் விளையாடி தங்கள் பணத்தினை இழந்து, விரக்தியில் 40க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு பல இன்னல்களை கடந்து தற்போது ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டத்தினை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.