டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா; முதல்வர் பதவியேற்பின் மூலம் இத்தனை சிறப்புகளை பெற்றாரா?
செய்தி முன்னோட்டம்
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.
இதன் மூலம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
50 வயதான ரேகா குப்தா, முன்னதாக, புதன்கிழமை மாலை நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், ஓபி தங்கர் உடன் சேர்ந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உடன், ரேகா குப்தா லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பின்னணி
அரசியல் பயணம் மற்றும் பின்னணி
டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ள ரேகா குப்தா, 1992 ஆம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
வலுவான ஆர்எஸ்எஸ் பின்புலத்தைக் கொண்ட அவர், 32 ஆண்டுகளாக அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
முன்பு டெல்லியில் கவுன்சிலராக பணியாற்றினார். ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறை எம்எல்ஏவாக தேர்வானார்.
வரலாறு
வரலாற்று மைல்கற்கள்
ரேகா குப்தா தனது நியமனத்தின் மூலம் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவை பின்வருமாறு:-
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் மற்றும் அதிஷிக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் ஆவார்.
நாடு தழுவிய அளவில் ஆட்சியில் இருக்கும் ஒரே பாஜக பெண் முதல்வர் ஆவார்.
மம்தா பானர்ஜியுடன் இணைந்து இந்தியாவில் பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் முதல்வர் ஆவார்.
ஆனந்திபென் படேலுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இரண்டாவது பாஜக பெண் முதல்வர் ஆனார்.
இந்தியாவில் ஐந்தாவது பாஜக பெண் முதல்வர் ஆனார்.
தலைநகரில் நீண்ட காலத்திற்கு பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.