இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்
சென்னை முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒளிரும் ஆடைகள் (ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மை காலமாக இரவு நேரங்களில் போதைப்பொருட்கள் கடத்தல், மது குடித்து வாகனம் ஓட்டுதல், ரேஸ் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தடுத்து கட்டுக்குள் கொண்டுவர தீவிர வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகள் மீறப்படுவது தொடர்பான 6,000 வழக்குகள் பதியப்படுகிறது என்று கூறப்படுகிறது. இவ்வாறு வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள் சாலை விபத்துகளில் சிக்கி பாதிப்படையும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க உத்தரவு
அதன்படி ஒரு மாதத்திற்கு 2 முறையாவது காவலர்கள் விபத்தில் சிக்கும் நிகழ்வு ஏற்படுகிறது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில், இரவு நேரங்களில் சாலை சாலைகள் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு எரிய வேண்டும். மின் விளக்கின் வெளிச்சமானது அதிகமுள்ள இடங்களில் மட்டுமே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். இரவில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் கட்டாயம் ஒளிரும் ஆடைகளை(ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மூன்று அடுக்குகளில் சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.